வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் சென்று இன்று அனைத்து பெண்களும் கல்வி கற்கும் மாற்றம் நிலவி பெண்கள் துணிச்சலாக பணிக்கும் செல்ல நேர்ந்த இந்த வேளையில் தான் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில் அதிகரித்துள்ளது என்று கூறுவது சற்று வியப்புகுரிய ஒன்றே. “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை” என்று கூறியவர் ஐ.நா. பொதுச் செயலாளர்  கோபி அன்னான்.

இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,  அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது.

நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.

உண்மையில் இது அனைவராலும் மறுக்க முடியாமல் ஏற்று கொள்ளக்கூடிய செய்தியே ஒரு நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து விடுகிறது இந்த சமூகம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். மேலும் ஒரு ஆண் செய்த தவறுக்கும் உலகத்தினரால் அந்த பெண் தான் வஞ்சிக்கபடுகிறாள் இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக,  ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காத நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது இரவில் தாமதமாக வீட்டிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும்.

நம் அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்ற ஒன்றாக கூட இருக்கலாம் கடந்த 1997ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விசாகா என்பவரின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கை என்பதை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தனது தீர்ப்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில் தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.
விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது, அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வு அடிப்படையில் வேலை செய்வோர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு புகார் குழுவிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.