கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலாவரத் துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம்.
கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன். இது போன்ற ஒருவரை மணந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?.
இப்படி கேட்டிருந்தவர், பணக்கார பேச்சுலர்களை எங்கே சந்திக்கலாம், பணக்காரர்களின் மனைவிகள் பெரும்பாலும் அழகாக இல்லாமல் இருப்பது ஏன்? கோடீஸ்வரர்கள் காதலியையும், மனைவியையும் எப்படி தீர்மானிக்கின்றனர்? என்றெல்லாமும் கேட்டிருந்தார். கேள்வி கேட்டவர் பூஜா சோகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கேள்வியின் கீழ், முகேஷ் அம்பானியின் தத்துவார்த்தமான பதில் எனும் தலைப்பில், நீளமான பதில் விளக்கம் அமைந்திருந்தது. உங்கள் கேள்வியை ஆர்வத்துடன் படித்தேன் என துவங்கும் அந்த விளக்கத்தில் ஒரு முதலீட்டாளர் பார்வையில் இதற்கு பதில் அளிக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, உங்கள் நிபந்தனையை நான் பூர்த்தி செய்தாலும் என்னால் உங்களை மணந்து கொள்ள முடியாது. அது மோசமான வர்த்தக முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, நீங்கள் அழகுக்கு பணத்தை மாற்றிக்கொள்ள நினைத்தாலும் அதில் உள்ள சிக்கல் என்ன என்றால் உங்கள் அழகு தேய்மான ரகத்தை சேர்ந்தது.
ஆனால், எனது சொத்து வளரக்கூடியது. அதிலும் உங்கள் அழகு ஆண்டுக்கு ஆண்டு குறையும் என்றால், எனது சொத்து வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும் 10 ஆண்டுகளில் உங்கள் அழகுக்கு மோசமான மதிப்பே இருக்கும், என தொடரும் அந்த பதிலில், 100 கோடி வருமானம் உள்ள யாரும் உங்களை மணந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைவிட ஏன் நீங்கள் ஆண்டுக்கு 100 கோடி சம்பாதிக்க கூடிவராக மாறக்கூடாது, கோடீஸ்வரரை மணப்பதை விட அது சாத்தியம் என முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிலுக்கு கீழே முகேஷ் அம்பானி என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கேள்வி பதில் சுவாரஸ்யமாக இருந்தாலும், இந்த கேள்வி நிஜமாக கேட்கப்பட்டதா? இதற்கு பதில் சொன்னவர் முகேஷ் தானா என்பதற்கு எந்த நம்பகமான தகவலும் இல்லை.
திடீரென இந்த கேள்வி பதில் இணையத்தில் உலாவத் துவங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கேள்வி எந்த இடத்தில் கேட்கப்பட்டது என்ற தகவலும் இல்லை; எப்போது கேட்கப்பட்டது என்ற விவரமும் இல்லை. ஒரு இணைய குழுவில் கேட்கப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஒரு சில இணையதளங்களில் இந்த கேள்வி பதில் வெளியானது. ஆனால், உண்மையில் இந்த கேள்வி பதில் 2 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபேஸ்புக் மற்றும் லிங்க்டு இன் தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சமீபத்தில் மீண்டும் ஒருவர் இதை லிங்க்டு ஒன் தளத்தில் எடுத்து போட்டிருக்கிறார்.
அது மட்டுமல்ல, இணையத்தில் தேடினால் இதே கேள்வி அமெரிக்க பெண்ணால் கேட்கப்பட்டு, அந்நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் அளித்த பதிலையும் பார்க்க முடிகிறது. இதில் எது அசல், எது நகல் என்று தெரியவில்லை. இதற்கு முன்னரே கூட இணையத்தில் இதுபோன்ற கேள்வி பதில் உலா வந்திருக்கலாம். லிங்க்டு இன் விவாத்ததிலேயே பலரும் இது முகேஷ் அம்பானியின் பதில் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஜேபி மோர்கன் நிறுவன தலைவரின் பதில் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆக, தேவையில்லாமல் முகேஷை இழுத்து விட்டிருக்கினர் போலும். இணையத்தில் வெளியாகும் தகவல்களில் எப்போதும் எச்சரிக்கை தேவை என்பதை தான் இந்த செய்தி உறுதிபடுத்துகிறது. அது மட்டுமல்லாமல் பெண்கள் பணத்திற்காக ஆசைப்படுபவர்கள் போன்ற தோற்றத்தை முன்வைத்து அவர்களை இழிவுபடுத்தவும் செய்கிறது.
Post a Comment