ஆரஞ்சு பழத்தில் சாத்துக்குடி ஒருவகையென்றால், சுளை சுளையாக காணப்படும் கமலா ஆரஞ்சு இந்த குளிர் சீசனில் அதிகமாகவே சந்தைகளில் கிடைக்கும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.
பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!
அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும். எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து தடவ, சருமம் மினு மினுக்கும்.
தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும். மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது சர்வ நிச்சயம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.
இவையெல்லாவற்றையும் விட வெளியில் செல்லும்போது வெயில் படாமல் இருக்க கையில் குடை எடுத்து சென்றால் சூரிய கதிர்களின் வெப்பத்தினால் சருமம் வறண்டு போவதை தடுக்க முடியும். மேற்கூறியவற்றில் உங்களுக்கு வசதியானவற்றை பின்பற்ற ஒரு சில நிமிடங்கள்தான் தேவை. அதை செய்தால் பள பளக்கும் மேனியை நிச்சயம் பெறலாம்.