வருகிற டிசம்பர் 19 தேதி சனிப்பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. அன்றைக்கு இதுவரையிலும் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார்.
அதனால் துலாம் ராசிக்கு என்னென்ன நன்மை, தீமைகள் உண்டாகுமென்று பார்ப்போம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரு மிகப்பெரிய விடியலாக இந்த சனி மாற்றத்துடன் ஏழரைச்சனி உங்களிடம் இருந்து விலகுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரவர் வயது, தகுதி, இருப்பிடம் ஆகியவற்றுக்கு ஏற்றார் போல நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடியப் போகிறது என்பதால் துலாம் ராசியினர் மனமார வரவேற்கும் சனிப்பெயர்ச்சி இது.
சனியினால் கடந்த 2009ம் ஆண்டு முதல் துலாம் ராசிக்காரர்கள் தொழில்ரீதியாக பின்னடைவுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைகளையும், பொருளாதாரச் சிக்கல்களையும் அனுபவித்து வந்தீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் வேலை, திருமணம் போன்றவைகளில் செட்டிலாவதை சனி தடுத்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக 2013-2014-ம் ஆண்டுகளில் பெரும்பாலான துலாம் ராசிக்காரர்கள் பட்ட அவஸ்தைகள் அதிகமானவை. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டும் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிப் பிழைத்தீர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய இன்னல்கள் எதுவும் துலாம் ராசிக்கு இல்லாவிட்டாலும் சனி தரும் சாதகமற்ற நிலைமைகள் தொடரவே செய்கிறது. அதுபோன்ற நிலைமைகளும் தற்போது உங்களுக்கு முழுவதுமாக விலக இருப்பதால் ஒரு மேன்மையான, ஒளிமயமான காலத்திற்குள் துலாத்தினர் தற்போது நுழைய இருக்கிறீர்கள்.
இந்த சனி மாற்றத்தினால் இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய பருவ, மற்றும் நடுத்தர வயது துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்க இருக்கிறது. எந்தெந்த விஷயங்களில் இதுவரை உங்களுக்குத் தடைகள் இருந்தனவோ அவை அனைத்தும் இப்போது விலக இருக்கிறது. வாழ்க்கையில் இதுவரை என்ன பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறதோ அது இனிமேல் கிடைக்கும்.
குறிப்பாக இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் காலூன்ற முடியாமல் தவித்து கொண்டிருப்பவர்கள், சரியான அஸ்திவாரம் இன்றி, பிடி கிடைக்காமல் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு போக முடியாமல் தவித்து கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள் அனைவருக்கும் இனிமேல் விடிவுகாலம் பிறந்து உங்களுடைய ஜீவன விஷயங்கள் லாபத்துடன் உங்களுக்கு கை கொடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.
ஏழரைச்சனி விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.
சனி விலகி விட்டதால் நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. மேலும், பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசாபுக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத்தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.
சுயதொழில் செய்வர்கள் மிக சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.
மனதுக்குப் பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.
குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு உடனடியாக நல்லமுறையில் குழந்தை பிறக்கும்.
இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.
வழக்கு, கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்லவழி பிறக்கும்.
குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி சேர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வந்து சேரும்.
நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.
அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். பங்குச்சந்தை, லாட்டரி, போட்டி, பந்தயங்கள் போன்றவைகள் கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள்.
துலாம் ராசிப் பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் நடுவில் அல்லாடியது இனி இருக்காது.
பரிகாரங்கள்:
ஏழரைச்சனி விலகுவதால் சனிப்பெயர்ச்சி அன்றோ உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி இனிமேல் எனக்கு ஒரு குறையும் வரவேண்டாம் என்று அனைத்தையும் காக்கும் எம்பெருமான் அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரரையும் அன்னையையும் வேண்டி வழிபட்டுத் திரும்புங்கள். சனியைப் பார்க்க வேண்டாம்.