Latest Post

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் சங்க கால வசிப்பிடமானக் கீழடித் தொல்லியல் களம் பற்றிய கட்டுரையே இது. தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற ஊருக்கு அருகில் இந்த அகழாய்வு மையம் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இது.

இதையடுத்து கீழடியில் கண்டெடுக்கப்பட்ட இர‌ண்டு கார்பன்‌ மாதிரிகளின் காலத்தைக் கண்டறிய அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ‘பீட்டா அனலடிக்‘ என்ற நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அவை அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பரிசோதனையின் முடிவுகளை மத்திய கலாசாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா  வெளியிட்டார். அதில் “கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மேடானது, கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சிக்கு அனுமதியளித்தது. தற்போது, கீழடியில் பெயரளவிற்கு மட்டுமே ஆராய்ச்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சுமார் 2200 வருடங்கள் பழமையானவை நிரூபணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீழடியில் கிடைக்கும் ஆய்வு முடிவுகள் தமிழகத்தின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தமிழகத்தில் கல்வெட்டுகள்,  புலவர் பாடல்கள் ஆகியவை உண்டு. ஆனால் நம்மிடம் வரலாற்று சாட்சியங்கள் இல்லை. தற்போது அவை கீழடியில் கிடைத்துள்ளன.

கீழடியில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தொழிற் கூடங்கள் செயல்பட்டதற்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அங்கே ஆய்வு நடத்தினால் வைகை ஆறு தடம் மாறிய தகவல்கள் கிடைக்கலாம். பழங்கால சமூகமாக இருந்தாலும் கீழடியில் வாழ்ந்த மக்கள் நாகரிக சமூகமாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் ஆய்வை தொடரும்போது கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அங்கே கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகமாக அமைப்பதற்கு தேவையான இடத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று அப்போதைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார் அமைச்சர் என்.டி.கே.ரங்கராஜன்.

இதுகுறித்து,  மத்திய தொல்லியல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கீழடியில் இரண்டு சதவிகிதம் மட்டுமே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இரண்டு வருடங்கள் ஆராய்ச்சி நடத்தியதற்கே 5,300 தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன என்றால், இன்னும் பத்து முதல் இருபது வருடங்கள்வரை ஆராய்ச்சி நடத்தினால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி நடத்தினால்தான் கீழடியின் உண்மையான காலத்தையும், அங்குவாழ்ந்த மக்களின் நாகரிகத்தையும் முழுமையாகக் கண்டறிய முடியும். இப்போது பரிசோதனையில் இருந்து கிடைத்திருக்கும் தகவல், மதுரைக்கு அருகே ‘சங்ககால நகரம்’  ஒன்று இருந்ததற்கான ஆதாரம் மட்டுமே. கீழடியில் முழுமையாக ஆறு மீட்டர் ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இந்த நகரம் எப்படித் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான “பெருமணலூர்” இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற தொடருக்குச் சான்று பகிர்கின்றதாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் குறிப்பிடுகிறார். வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

‘ஆதன்’, ‘உதிரன்’, ‘திசன்’ போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன. இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

முதல் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி கீழடியில் ஜூன், 2015 ஆம் ஆண்டு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு தொடங்கியது. இரண்டாம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி  2016 ஆம் ஆண்டு  ஜனவரி 2ந்தேதி அன்று அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள்,  பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு சனவரி, 2017 முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெறுகிறது. இப்பணி 30 செப்டம்பர் 2017ல் முடிகிறது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகில் பொய் சொல்லாத மனிதரே இல்லை. எவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். இதை பொய் என்பது ஒருவிதம், உண்மையை மறைப்பது என்பது இன்னொரு விதம். நீங்கள் கேட்கலாம் இரண்டிற்கும் என வித்தியாசம் இருக்கிறது என்று இருக்கிறது.

ஒரு உதாரணம் மூலமாக சொல்லலாம். நான்கு குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவருடைய பொம்மையை மற்றோருவர் எடுத்து மறைத்து வைத்து விட்டு, நான் எடுக்கவில்லை என்றால் அது பொய். பொம்மையை வைத்திருந்த குழந்தை தேடும் பொழுது, மூன்றாவது குழந்தை பொம்மையை எடுத்து சென்ற குழந்தையை காட்டி கொடுக்காமல் அமைதியாய் இருந்தால் அது உண்மையை மறைப்பது. பெரும்பாலும் கணவர் எங்கு பொய் சொல்கிறார்கள், எங்கு உண்மையை மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பெண்களுக்கு எப்போதும் ஆடை, ஆபரணங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு. ஒரு திருமணத்திற்கு நீங்கள் கிளம்பும் பொழுது, இந்த ஆடை எனக்கு எப்படி இருக்கு என்று கேட்டால், அவ்வளவாக நன்றாக இல்லை என்றால், நீங்கள் வருத்தப்படுவீர்கள் இல்லை என்றால் மாற்றிக்கொள்ள செல்வீர்கள். அவ்வளவு பொறுமை அவர்களுக்கு கிடையாது. எனவே மிக அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அதற்காக உங்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை என்று அர்த்தம் இல்லை. என்றுமே என் மனைவியின் அழகை நானே ரசிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறைந்திருக்கிறது.

நீங்கள் பண்டிகை காலங்களில் ஆடைகள் வாங்குவதற்காக மாலை வேளையில் கடைக்கு செல்ல இரு தினங்களுக்கு முன்பே முடிவு செய்கிறீர்கள். உங்கள் கணவர் அலுவலக பணிகள் முடிந்து வந்தவுடன் போக காத்திருக்கிறீர்கள். அன்று உங்கள் கணவருக்கு அலுவலக பணி அதிகமாக இருக்கிறது மற்றும் அவர் மேலதிகாரி அவருக்கு எதோ அவசர வேலை கொடுத்திருக்கிறார். அதை உங்களிடம் சொன்னால் பிரச்சனை வரும் என கருதி அவர் சொல்ல ஆரம்பிப்பது, இதோ நான் 10 நிமிடத்தில் கிளம்பிவிட்டேன் என்பது. இப்படியே பத்து பத்து நிமிடமாக 1 மணி நேரம் போய்விடும்.

ஆண்களுக்கு எப்போதுமே பெண்களிடம் ஒரு கர்வம் இல்லை தலைக்கனம் என்றே சொல்லலாம். என்னால் எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்க முடியும், மிக மோசமான பிரச்சனைகளை கூட. உதாரணமாக, உங்கள் வீட்டின் குழாய் சரி செய்ய வரச்சொல்ல வேண்டும், இரு தினங்களாக உங்கள் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவர் வேலை சுமையின் காரணமாக மறந்துவிடுகிறார். அப்போது உங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னால் அவர் கர்வம் போய்விடும், உடனே உங்களிடம் நான் சொல்லிவிட்டேன். நாளை வருவார்கள் என்று பொய் சொல்வது.
உங்கள் கணவர் எதாவது ஒரு பிரச்சனையின் காரணமாக வருத்தமாய் இருக்கும் பொழுது, நீங்கள் கேட்டல் ஒன்றும் இல்லை என்பார். கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டல், இது என்னுடைய பிரச்சனை நானே சரிசெய்து கொள்வேன் என்பர். அவர் அதை உங்களிடம் சொல்லி உங்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் என்பதற்கான பொய் அது.

நீங்களும் உங்கள் கணவரும், அவருடைய அலுவலகம் முடிந்ததும் திரைப்படத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பீர்கள். உங்கள் கணவரே உங்களை வந்து அழைத்து செல்வதாய் கூறி இருப்பார். நீங்கள் உங்கள் கணவரின் கைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவர் வேலை சுமையில் அதை மறந்து கால தாமதமாக வீட்டுக்கு வரும் பொழுது, அவர் மறந்ததை காட்டி கொள்ளாமல் நான் உன் கைபேசிக்கு அழைத்தேன், ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது என்பர்.

உங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும். உங்களிடம் கேட்கும் பொழுது, நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். அவரும் அதை ஏற்று கொள்வதாய் சொல்லிவிட்டு, இரவு தூங்கும் வேளையில் என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைக்கிறார்கள் என்று உங்களின் மனதை மாற்ற முயற்சிப்பது.

நீங்களும் உங்கள் கணவரும் வெளியில் சென்றிக்கும் பொழுது, உங்களை ஒரு அழகான பெண் கடந்து சென்றால், உங்கள் கணவர் அந்த பெண்ணை உற்று நோக்குவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உடனே உங்கள் கணவர், நான் அவளை பார்க்கவில்லை. நான் அவள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. உனக்கு வாங்கலாம் என்பதற்காக அவள் ஆடையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பர்.

எப்பொழுதும் உங்கள் கணவர், அவருடைய முன்னாள் வாழ்க்கையை பற்றி ஏதும் உங்களிடம் கூறி இருக்கமாட்டார். எல்லா ஆண்களுக்கும் திருமணத்திற்கு முன்பு எப்படியும் ஒரு காதல் இருந்திருக்கும். அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் மறைத்திருப்பர். அதை பற்றி மனைவியிடம் உண்மையை சொல்லும் கணவர் மிக நேர்மையானவர். ஆனாலும் அதை பற்றி மனைவியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பமாட்டார்.

தான் தன் மனைவியை விட சிறந்தவன் எனும் கர்வம் எப்போதும் ஆண்களின் மனதில் வேரூன்றி இருக்கும். அவர்கள் எப்போதும் உன்னை விட நான் சிறந்தவன் அல்லது நான் தான் அறிவாளி என்று கூறிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களுக்கும் தெரியும் அது பொய் என்று.

நான் எப்போதும் பொய் சொல்லமாட்டேன். இதுவே அவர் சொல்லும் மிக பெரிய பொய். அவர் உங்களிடம் எதாவது பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் அது பொய் என்று தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று அந்த சூழ்நிலையை சமாளிக்க பொய் சொல்வது. அப்போது தான் நான் பொய்யே சொல்லமாட்டேன் எனும் வாசகமும்.

மெய்யும், பொய்யும் கலந்ததே மனித வாழ்கை. பொய் பேசுபவன் கெட்டவனும் இல்லை, உண்மையை பேசுபவன் நல்லவனும் இல்லை. உண்மை பேசி தீமையை விளைவிப்பதை விட தக்க தருணத்தில் பொய் பேசி அதிலிருந்து காப்பது நன்மை பயக்கும். உங்கள் கணவர் சொல்லும் சின்ன பொய்களை கூட ரசிச்சு பாருங்க, அப்புறம் உங்க வாழ்க்கையே உங்களுக்கு இனிமையானது இருக்கும்.

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள்.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது அவ்வளவு எளிதல்ல.

1000 அடி நீளமுள்ள இந்த மலை குகையில் கடுமையான வரட்சியான காலத்திலும் கூட எப்பொழுதும் 4 அடி முதல் 5 அடி நீர் நிறைந்தே இருக்கிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது எங்கே செல்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது .

இந்த தண்ணீரில் அதிசயமான பல மூலிகைகளின் சக்திகள் இருப்பதாகவும் இதில் நடத்து சென்று நரசிம்மரை தரிசித்தால் பல்வேறு வியாதிகள் குணமாகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையில் எப்பொழுதும் வவ்வால்கள் தொங்கியபடியே இருக்கிறது இந்த வௌவால்கள் மனிதர்களை கண்டு பயப்படுவதுமில்லை, இதுவரை எந்த மனிதர்களையும் காயப்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குகையின் இறுதியில் சுயம்புவாக தோன்றிய ஜர்னி நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.

நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற மனவுறுதியுடன் கடினமான பாதைகளை கடந்து சென்றால் ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற காலம் சென்று இன்று அனைத்து பெண்களும் கல்வி கற்கும் மாற்றம் நிலவி பெண்கள் துணிச்சலாக பணிக்கும் செல்ல நேர்ந்த இந்த வேளையில் தான் அவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களும் பணியிடங்களில் அதிகரித்துள்ளது என்று கூறுவது சற்று வியப்புகுரிய ஒன்றே. “பாலின சமத்துவம் என்பது ஓர் இலக்கு மட்டுமல்ல! வறுமை ஒழிப்பு,  நீடித்த வளர்ச்சி,  நல்லாட்சி போன்ற பெரும் சவால்களை சந்திக்கத் தேவையான ஒரு முன் நிபந்தனை” என்று கூறியவர் ஐ.நா. பொதுச் செயலாளர்  கோபி அன்னான்.

இன்னும் சொல்லப்போனால் வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள்,  பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,  அதன் நடைமுறை விதிகள் மக்கள் எளிதில் பயன்படுத்த இயலாத வகையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. காவல்துறையின் அணுகுமுறை, தாமதமான செயல்பாடு போன்றவற்றால், காலம் கடந்துதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல வழக்குகளில் நடவடிக்கை என்பது பாதிப்புக்குள்ளானவரையே குற்றவாளி ஆக்குகிறது.

நமது சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதனால், குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. உலகளவில் எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா இருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு வேதனை கொள்ளவேண்டிய தருணம். கற்புக்கு பெயர் கொண்ட நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக பல பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களும் துன்புறுத்தல்களும் பணி செய்யும் இடங்களில் நடைப்பெறுகிறது.

பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,  சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து தவறாக நடக்க முற்படும் உயரதிகாரிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன. சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.

உண்மையில் இது அனைவராலும் மறுக்க முடியாமல் ஏற்று கொள்ளக்கூடிய செய்தியே ஒரு நடிகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதை மறந்து விடுகிறது இந்த சமூகம். பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். மேலும் ஒரு ஆண் செய்த தவறுக்கும் உலகத்தினரால் அந்த பெண் தான் வஞ்சிக்கபடுகிறாள் இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள் மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக,  ஒத்துழைத்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காத நிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது இரவில் தாமதமாக வீட்டிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்குவது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும்.

நம் அனைவருக்கும் இது தெரிந்த செய்தி என்ற ஒன்றாக கூட இருக்கலாம் கடந்த 1997ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விசாகா என்பவரின் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கை என்பதை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. இவ்வழக்கில் தனது தீர்ப்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது. இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில் தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.
விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்படி நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது, அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வு அடிப்படையில் வேலை செய்வோர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்துள்ளது. இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்கள் பணியாற்றும் எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அவ்வாறு புகார் குழுவிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து. ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்கள் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கும் மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்று கூறுகின்றனர்.

பெண்களின் உடை,  நடத்தைகளைப் பற்றி பேசும் சிலர் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதையும் சற்று யோசித்து செயல்படுங்கள். மேலும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள்,  பணிக்கு செல்லும் தங்களின் மனைவி,  சகோதரி,  மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பல பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாக உள்ளது. சுதந்திர இந்தியாவில் நம் பெண்களும் சுதந்திரமாக தான் இருக்கட்டுமே அவர்களை உடல் ரீதியாகவும் உள்ளத்தின் ரீதியாகவும் ஏன் துன்புறுத்த வேண்டும் சற்றே சிந்தியுங்கள் தோழர்களே.

பக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.

தல வரலாறு :
காசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.

இதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.

அவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.

அதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.

காசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.

அந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

தென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

இக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.

ஆலய அமைப்பு :
இங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.

வழிபாடு :
அதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.

1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆலயச் சிறப்புகள் :
இக்கோவிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கோவில் நடை அடைக்கப்படும் முன்பாக, சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கின்றனரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டே நடை அடைக்கப்படுகிறது. இக் கோவிலுக்குத் தாமதமாக வருபவர்களும் பசியால் வாடாமலிருக்க, இங்கிருக்கும் ஆலமரம் ஒன்றில் கோவில் பிரசாதம் உணவுப் பொட்டலமாகக் கட்டித் தொங்கவிடப்படுகிறது.

இங்கு அன்னதானத்திற்கு எடுக்கப்படும் அரிசியின் அளவிற்கேற்பக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்கின்றனர். ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அவர்களது வறுமை அனைத்தும் நீங்கி வளமடைவர் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பெயர்க் காரணம் :
அன்னபூரணேஸ்வரி கோவில் அமைந்திருக்குமிடம் ‘செருகுன்னு’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரிலிருக்கும் சிறு குன்று ஒன்றின் மேல் இக்கோவில் அமைந்திருப்பதால், சிறு குன்று என்று அழைக்கப் பெற்றுப் பின்னர் அது ‘செருகுன்னு’ என்று மாறிப் போய்விட்டது என்று சிலரும், தொடக்கத்தில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்தது என்றும், சோற்றுக்குன்று என்று அழைக்கப்பட்டதே செருகுன்னு என்று மருவி விட்டது என்று சிலரும் சொல்கின்றனர்.

அமைவிடம் :
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

அதிக அளவு சிகரெட் பிடிப்பவர்கள் அப்பழக்கத்தை கைவிட முடியாமல் தினமும் ஒரு சிகரெட்டாவது புகைத்து விடுகிறார்கள். அதனால் உடலுக்கு எந்தவித தீமையும் ஏற்படாது என கருதுகின்றனர்.

அது தவறு என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் கூட இருதயம் பலவிதமான நோய்களால் கடுமையாக பாதிக்கும். பின்னர் அதுவே வயதான காலத்தில் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வு கூறுகிறது.

தினசரி 20 சிகரெட் புகைப்பவர் அதை கைவிட்டு ஒரு சிகரெட்டுக்கு மாறினாலும் மரணத்தை ஏற்படுத்தும். இருதய நோய்களை உருவாக்கும்.

எனவே இருதய நோய்களில் இருந்து தப்பிக்க சிகரெட் பிடிக்க எந்த ஒரு வரையறையும் இல்லை என அறிவியல் இதழில் நிபுணர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். 1946 முதல் 2015-ம் ஆண்டு வரை படிப்படியாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் தினமும் ஒரு சிகரெட் பிடிக்கும் ஆண்களில் 48 சதவீதம் பேரும் பெண்களில் 57 சதவீதம் பேரும் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் ஆண்களில் 25 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதம் பேரும் பக்கவாதத்தால் அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.