காலம் கடந்தும் மக்கள் மனதை வென்று நிற்கும் வாகனமே புல்லட்

அந்தக் காலத்தில் காளைய அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது மாதிரி மக்களோட வீரம், கம்பீரத்தை வெளிகாட்டுகின்ற ஒரு விஷயமாக புல்லட் இருந்தது நிதர்சனமான உண்மை. ஆயிரம் வாகனங்கள் ரோட்டுல போனாலும் புல்லட் அந்த “தட தட தட”ங்கற சத்ததோட போறது தனியா தெரியும். பார்க்கறதுக்கு தாங்க அது முரட்டுத்தனமான வண்டியா தெரியும், ஒட்டிப்பார்த்தா சூதுகவ்வும் படத்துல ஒரு டைலாக் வருமே “நான் காரா ஓட்டுறேன், கடவுளையே ஓட்டறேன்”னு அது அப்படியே புல்லட்டிற்கும்  பொருந்தும். சுருக்கமா சொல்லப்  போனா யானைய ஓட்டற மாதிரி. ஏறி உக்கார்ந்துட்டா அப்புறம் நாம சொல்றபடி கேட்கும். அந்த காலத்து புல்லட்டில் ஸெல்ப் ஸ்டார்ட் எல்லாம் கிடையாது. ஆம்ப்ஸ்  மீட்டர் ஜீரோ வந்திருச்சா’னு பார்த்து “சலக்” னு ஒரே ஒரு உதை, உதைச்சா போதும். சிங்கம் கெளம்பீருச்சு. சண்டியர் கணக்கா போய்ட்டே இருக்கலாம். எத்தனை நூரம் போனாலும் அலுப்பே தெரியாமல் போகக் கூடிய வாகனம் இது மட்டுமே. மைனர் என்றால் நம் நினைவிற்கு வருவது தங்கச் சங்கிலியும், புல்லட் வண்டியும் ஆகிய   இரண்டுதான். புல்லட் வைத்திருக்கும் மைனர் மாப்பிள்ளைகளுக்கு கிராமத்தில் இன்றளவும் மவுசு கூடத்தான். ஆக அப்படிப்பட்ட இந்த வண்டியோட கதை தான் என்ன ?அதுக்கு ஏன் “புல்லட்” டுனு பெயர் வந்தது ?

இங்கிலாந்தைச்  சேர்ந்த ராயல் என்பீல்ட் நிறுவனம் 1893 ஆம் ஆண்டு தொடங்கி மோட்டார் சைக்கிள், பை சைக்கிள், புல் வெட்டும் இயந்திரங்கள், மற்றும் நகரும் இயந்திரங்கள்’னு பலவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இவர்களுடைய முதல் என்பீல்ட் புல்லட் 19௦1 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அது ராயல் என்பீல்ட்’ங்கற பெயருடன் வெளிவந்தது. இவர்களுடைய தயாரிப்பில் “என்பீல்ட் ரைபிள்” என்ற துப்பாக்கியும் அடக்கம். அதனால் அவர்களுடைய லோகோ-வில் “மேடு லைக் எ கன்” (Made Like a Gun) என்ற வாக்கியத்துடன் வரும். அவர்களுடைய வாகனத்தையும் புல்லட் என்ற பெயரிட்டனர், Royal Enfield Bullet என்றே வெளிவந்தது. இந்த வாகனம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. எல்லை பாதுகாப்பு பணிக்கு அது சரியானதொரு வாகனமாக இந்திய அரசு கருதியது.

இதன் வரவேற்பு அதிகரிக்கவே இந்த வாகனத்தை இந்தியாவில் தயாரிக்க 1949 ஆம் ஆண்டு என்பீல்ட் நிறுவனம் இந்தியாவின் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து சென்னையில் “என்பீல்ட் ஆப் இந்தியா” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கம் காவல்துறை மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு இவைகளுக்காக பயன்படுத்தத்  தொடங்கினர். 1955 ஆம் ஆண்டு ஒரே முறையில் 800, 350-cc புல்லட் வண்டிகளுக்கு இந்திய அரசு ஆர்டர் கொடுத்தது. இது அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய ஆர்டராகும். 1957 ஆம் ஆண்டில் இருந்து வாகனத்திற்கான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டது. சுமார் 197௦ ஆம் ஆண்டு இங்கிலாந்துக் கம்பெனி ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. எனினும் இந்தியாவில் ராயல் என்பீல்ட் பாக்டரி தங்கு தடையின்றி இந்தியாவில் தயாரிப்புகளை தயார் செய்தும் விற்பனை செய்தும், மற்றும் யூரோப், அமேரிக்கா, தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தது குறிப்பிடத்தக்கது. இடையில் நவீன ரக பைக்குகளின் வரவுகள் சில காலம் ராயல் என்பீல்ட்’டின் விற்பனை சந்தையை மந்தமாகியது. இதனால் தங்களின் மாடல்களை எப்பொழுதும் நவீனப்படுத்திக் கொண்டு வந்த நிறுவனம் புது படைப்புகளுடன் இப்பொழுது மீண்டும் விற்பனை களத்தில் முன்னணியில் உள்ளது. இன்றைய இளைய தலைமுறை புல்லட்களை பெரிதும் விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இப்பொழுது சந்தையில் உள்ள ஒரு ரகங்கள் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்.

ராயல் என்பீல்ட் புல்லட் ஸ்டாண்டர்ட் 350 cc என்பது ஆரம்ப மாடலாகும். இதில் கிக் ஸ்டார்ட் மட்டுமே உள்ளது. பரமாரிப்பு சரியாக இருந்தால் லிட்டருக்கு 5௦ கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைத்தாலும் நிறுவனம் நமக்கு தரும் உத்தரவாதம் நாற்பது தான். இதன் மற்றொரு மாடல் எலெக்ட்ரா கிக் ஸ்டார்ட் உடன் வருகிறது.

ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 cc மற்றும் கிளாசிக் 5௦0 cc – என்பீல்ட் நிறுவனம் பழைய மாடல் புல்லட்களை போல் மீண்டும் தயாரிக்க முற்பட்டதில் பிறந்தது தான் இவ்விரண்டு மாடல்கள். பழைய ரக ஒற்றை ஸ்பீடாமீட்டர், அதன் கீழ் சாவி மற்றும் ஆம்ப்’க்கான வசதிகள். ஹெட்லைட்டிற்கு மேல் இருபுறமும் சிறய நைட் விளக்குகள், நவீன ஹாலோஜன் ஹெட்லைட். இதன் நவீன என்ஜின் கிராமப்புறம் மற்றும் நகர்புறம், ஹைவே அனைத்திலும் எளிதாக பயணம் செய்வதற்கான தரத்தில் உள்ளது. நமக்கான தினசரி பயன்பாட்டிற்கு 35௦ cc மாடலும், அடிக்கடி நீண்ட தூரம் செய்பவர்களுக்கு 50௦ cc மாடல்களும் பொருந்தும். இதன் மைலேஜ் உத்தரவாதம் நாற்பது. சுமார் 9 கலர்களில் இவ்வகை வாகனங்கள் கிடைக்கிறது.

தண்டர்பேட் 350 மற்றும் 5௦0 வகைகள் –சுமார் 5௦ ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வகை உருவத்தில் வாகனங்கள் தயாரிப்பதானால் ஒரு சில மாடல்களுக்கு உருவத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை கவர முடியும் என்று உருவாக்கப்பட்டதே தண்டர்பேட் மாடல்கள். நீண்ட தூர சொகுசு பயணத்திற்கு ஏற்ற உயர ஹாண்டல்பார்கள், 20 லிட்டர் பெட்ரோல் டேங், பெரிய இருக்கைகள் என்று அதிர்வில்லாத நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இது போக பிற மாடல்களும் ரேஸ் பைக் உட்பட என்பீல்ட் கம்பெனி தயாரிப்புகளில் வருகிறது. அதோடு டீசல் என்ஜினில் வந்த ஒரே இரு சக்கர வாகனம் புல்லட் மட்டுமே

புல்லட் அல்லது உயர் ரக பைக்’குகள் வாங்குவது நம்மில் ஒரு சாராருக்கு அன்றாட தேவைக்கான விஷயமாக இருந்தாலும் மற்றொரு சாராருக்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவ்வகை மாடல்கள் வாங்கி அதை பெரிய பொருட்செலவில் தங்களுக்கு ஏற்றார் போல் எஞ்சின் ஆல்டர் செய்துகொள்ளவும், சைலன்சர்கள், ஹெட் லாம்ப்கள், மக்கட், போன்ற பாகங்களை மாற்றிக்கொள்ளவும் ஒரு தனி சந்தை, தனி பணிமனைகள் செயல்படுகிறது.

பெரு நகரங்களில் ராயல் என்பீல்ட் ஒநெர்ஸ் க்ளப், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் ரைடர்ஸ் க்ளப், போன்ற பல க்ளப்கள் உள்ளன. இவர்கள் வார அல்லது மாத இறுதி என்று முடிவு செய்து மாநிலங்களை கடந்து நீண்ட தூர பயணம் சென்று வருகிறார்கள். கோவா போன்ற நகரங்களில் ராயல் என்பீல்ட்காக பிரத்யேக ரேஸ்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன வரலாற்று பட்டியலில் ராயல் என்பீல்ட்க்கு ஒரு சிறப்பிடம் நிலையாக உள்ளது. பல துறைகளில் உள்ள நிறுவனங்களில் 1949 முதல் இயங்கும் பழங்கால பிராண்டுகளில் இதுவும் ஒன்று. இரு சக்கர வாகனத்திலும் சொகுசாக செல்ல முடியும் என்று மக்கள் உணர்ந்தது இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே. முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை போட்டவர்கள் மட்டுமே புல்லட் பயன்படுத்தி வந்த கலாசாரம் இப்பொழுது மாறி, நவீன உடையில் அலுவலகம் செல்லும் இன்றைய தலைமுறையும் புல்லட்டில் செல்கிறது.

புல்லட் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உடனே முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சென்னையில் இரண்டு இடங்களில் இதன் தயாரிப்பை விஸ்தரிப்பு செய்தாலும் வாடிக்கையாளர்கள் ஆறு மாதத்திற்கு முன்பில் இருந்தே முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உங்களுக்கு வேண்டுகின்ற நிறம், மாடல், அனைத்தையும் முடிவு செய்து ஒரு முன்பதிவு தொகையை மட்டும் செலுத்திக்  காத்திருந்தால் குறித்த நேரத்தில் உங்கள் வாகனம் உங்களை வந்தடையும்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.