பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை.
பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக் குலுங்குகையில் மகிழ்கின்றனர்.
ஆண்களை வேர்கள் என்று சொல்ல வேண்டும். அவை பூமிக்குள் மறைந்திருக்கும். எப்போதும் வெளியே வந்து, ‘நான் தான் வேர்’ என அது விளம்பரப் படுத்துவதில்லை. ஆனால் அந்த குடும்பம் எனும் மரம் சாய்ந்து விடாதபடி எப்போதும் பூமியை இறுகப் பற்றிக் கொண்டே இருக்கும். பூக்களின் வசீகரம் குறைந்தால் உடனடியாக நீரை உறிஞ்சி கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.
கிளைகள் பூக்கிரீடம் சூட்டிக்கொள்ளும் போது வேர்களில் விழா நடக்கும். ஆனால் அந்த விழாவை யாரும் காண்பதில்லை. அது ஆழ்கடலில் குதித்து விளையாடும் ஒரு மீனைப் போல வெளிப்பார்வைக்கு மறைவாகவே இருக்கிறது.
கிளைகளின் வசீகரமும், இலைகளின் வசீகரமும் வேர்களைப் பற்றிய நினைவுகளையே மறக்கடிக்கச் செய்து விடுகின்றன. அதற்காக வேர்கள் கவலைப்படுவதில்லை. தன் கடன் பணிசெய்து கிடப்பதே என அமைதியாய் இருக்கின்றன.
வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையைத் துருவிப் பார்த்தால் அதிகம் பேசாத ஆண்களே அங்கே இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் தனது வெற்றி என்பது மனைவியர் தோல்வியடையாமல் இருப்பதே எனும் ஞானத்தை அடைந்த ஞானியர்கள் அவர்கள்.
ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள். கனவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன ?” என்று கேட்டார்கள்.
கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.
“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”
“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”
“அப்போ பெரிய விஷயங்கள் ?”
“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ? இந்த மாதிரி ! ”
அதாவது குடும்பத்தின் சாவியை மனைவியிடம் ஒப்படைத்து விடுபவர்கள் ஆண்கள். காரணம் வேறொன்றுமில்லை குடும்பம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அதனால் தான் சீரியல் பார்த்து ரொம்பவே துயரத்தில் இருக்கும் பெண்களிடம் தங்களுடைய பிரச்சினைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அதற்காக, “எதுவும் பேசமாட்டாரு” எனும் பட்டத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.
ஆண்கள் பேசாமலிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம், “பேசப் போய் வீணா எதுக்கு பிரச்சினை” என்பது தான். பெண்களால் பேசாமலிருக்க முடிவதில்லை. காரணம் அவர்கள் பேசுவதற்காகப் படைக்கப்பட்டவர்கள். அவர்களால் பேசாமல் இருக்க முடிவதில்லை. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் ஏவாளைப் படைக்கும் முன் ஆதாமைப் படைத்து வைத்தாரோ கடவுள் எனும் சந்தேகம் எனக்கு உண்டு.
பெண்கள் உணர்ச்சிகளை கொட்டோ கொட்டெனக் கொட்டுவார்கள். அதைக் காயப்படுத்தாமலும், ஈரப்படுத்தாமலும் காதில் போட்டுக்கொள்ள வேண்டிய கடமை கணவனுக்கு உண்டு. திடீரென “நீங்க என்ன சொல்றீங்க ?” என மனைவி கேட்டால் கணவனுக்கு இரண்டு பதட்டங்கள் வரும். ஒன்று, “நான் என்ன சொன்னா பிரச்சினை இல்லாமல் இருக்கும்”. இரண்டாவது, “இதுவரை மனைவி என்ன தான் பேசிட்டிருந்தா?”. மனைவியர் அந்த கேள்வியைக் கேட்காமல் இருப்பது என்பது என்ன ஒரு பாக்கியம் என்பது கணவர்களுக்கு மட்டுமே தெரியும்!.
மனைவியின் பேச்சில் உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். உடன்பாடு இருந்தால் நீங்கள் அமைதியாய் இருக்கலாம். மறுபடி வாசிக்க வேண்டாம். சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன். “வாயை மூடிட்டு பேசறதைக் கேளு” எனும் ஒரு வரி தான் பெரும்பாலும் ஆண்களுக்கான உரையாடலின் பங்கு.
இன்னொரு முக்கியமான விஷயம் மறதி ! . மறதி என்பது ஆண்களுக்கு இறைவன் கொடுத்த வரம். பெண்களின் அதீத ஞாபகசக்தி ஆண்களுக்கு இறைவன் கொடுத்த சாபம். எல்லாவற்றுக்கும் ஒரு சமநிலை வைப்பவர் இறைவன் என்பதன் இன்னொரு வெளிப்பாடு இது. கல்யாணம் ஆன புதுசுல நீங்கள் சொன்னது முதல், நேற்று நீங்கள் வாங்க மறந்த விஷயங்கள் வரை மனைவியின் நினைவுப் பேழையில் இருக்கும். மறதிக்கு மனைவி தரும் பெயர், “உங்களுக்கு அக்கறையில்லை !!!”. அப்படி மனைவி திட்டியதையே அரைமணி நேரத்தில் ஆண்கள் மறந்துவிடுவது தான் வரத்தின் அழகு.
வாரம் ஆறு நாட்கள் வீட்டிலேயே இருந்து தேவையான உதவிகளைச் செய்துவிட்டு ஏழாவது நாள் மாலையில் அரைமணி நேரம் வெளியே கிளம்பும் போது பின்னாடியிருந்து ஒரு குரல் கேட்கும், “எப்பவும் பிரண்ட்ஸ் கூட சுத்தினா போதும்… நாளைக்கு பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு.. வீட்ல அவ்ளோ வேலை இருக்கு…!!!”. அந்த நேரத்தில் உள்ளுக்குள் எழுகின்ற எரிமலைக் குழம்பை, ஆலகால விஷத்தைப் போல தொண்டைக்குழியில் தேக்கி, “ஒன் அவர்ல வந்திடுவேன்” என சிரித்துக் கொண்டே சொல்லும் கலை அவ்ளோ ஈசியா என்ன?.
தான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ஒரு நன்றி, ஒரு பாராட்டு வேண்டுமென எதிர்பார்ப்பவர் மனைவி என்பது கணவர்களுக்குத் தெரியும். மறக்காமல் அதைச் செய்து விடுவார்கள். ஆனால் கணவன் செய்யும் செயல்களெல்லாம் ‘அது அவரோட கடமை’ ரேஞ்சுக்குத் தான் பெரும்பாலும் மனைவியரால் எடுத்துக் கொள்ளப்படும். “மனைவி திட்டாம இருந்தா, பாராட்டினதுக்கு சமம்பா” என்பதே ஆண்களின் ஆழ்மன சிந்தனை.
“இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா?” எனும் குரல் கேட்காத வீடுகள் உண்டா? மனைவியை திருப்திப்படுத்த அடுத்த முறை ஏதாவது தாமாகவே செய்தால், “ஏன் இதையெல்லாம் செஞ்சிட்டு திரியறீங்க?” எனும் பதில் வரும். அமைதியாய் ,”அப்போ என்ன செய்யணும்” என்று கேட்டால் “இதெல்லாம் கூட நான் சொன்னா தான் செய்வீங்களா?” எனும் பதில் வரும். உலகம் மட்டுமல்ல உருண்டை எனும் அறிவியல் உண்மை உணர்ந்த களைப்பில் ஆண்கள் சிரிக்கும் சிரிப்பு அவர்களுக்கே புரியாதது.
“மன்னிச்சிடும்மா” எனும் ஆண்களின் வார்த்தையில் “ஆள விடு சாமி… ” எனும் பொருள் உண்டு. அந்தப் பொருள் வெளியே தெரியாத அளவுக்கு பேசும் வலிமையில்லாத கணவர்கள் வாட்ஸ்ஸப் பயன்படுத்துவதே நல்லது. நடிப்பை விட ஐகான் ஈசி! “ஆமா செய்றதையெல்லாம் செஞ்சுட்டு.. மன்னிப்பு வேற” என இரட்டையாய் எகிறும் மனைவியரை சமாளிப்பது கலிங்கப்போரை விடக் கடினமானது.
என்ன பரிசு கிடைத்தாலும், “வாவ்.. சூப்பர்” என்பது கணவர்களின் வழக்கம். மனைவியோ “சேலை.. நல்லா ‘தான்’ இருக்கு, பட் பார்டர் கொஞ்சம் சரியில்லை.. எவ்ளோ ஆச்சு… மாத்த முடியுமா?” என பல கேள்விகளுக்கு நடுவே ஏண்டா கிஃப்ட் வாங்கினோம் என கலங்கும் கணவர்கள் அப்பாவிகளா இல்லையா?.
வெளியே போக தயாராகி ஒருமணி நேரம் காத்திருப்பார் கணவன். மேக்கப் முடித்த மனைவி சொல்வார், “சீக்கிரம் வாங்க, காரை வெளியே எடுத்திருக்கலாம்ல, ஷூ போடுங்க, கார் சாவி எங்கே? எல்லா இடத்துக்கும் லேட்டாவே போக வேண்டியது”. “இதப்பார்ரா…” என கவுண்டமணி கணக்காய் மனசுக்குள் ஒலிக்கும் குரலை வெளிக்காட்ட முடியுமா என்ன?.
“இதெல்லாம் என்கிட்டே சொல்லவேயில்லை” எனும் மிரட்டல் கேள்வி தவறாமல் வரும் ஆண்கள் எதையாவது தெரியாத்தனமா மறந்து தொலைத்தால். அதே விஷயத்தை மனைவி சொல்லாமல் இருந்தால், “ஆமா.. நீங்க எப்போ வீட்டுக்கு வரீங்க, எங்கே பேசறீங்க… இதையெல்லாம் சொல்ல ?”எனும் பதில் தானே வழக்கம்!.
இப்படியெல்லாம் எதிரும் புதிருமாக இருந்தாலும், இணைந்தே வாழ்வதில் தான் குடும்ப வாழ்க்கை அர்த்தமடைகிறது. ஆண் எனும் பாத்திரத்தில் ஊற்றி நிரப்பும் பானமாக பெண் இருப்பதும், பெண் எனும் பாத்திரத்தில் நிரம்பித் தளும்பும் பானமாக ஆண் இருப்பதுமே வாழ்வின் அழகு.
ஒருவருடைய தவறை அடுத்தவர் எளிதாக எடுத்துக் கொள்வதும், வெற்றிகளை இணைந்தே ரசிப்பதும், ரசனைகளை மதிப்பதும், தனிப்பட்ட நேரங்களை ஒதுக்குவதும், விவாதங்களில் தோற்பதை வெற்றியாய் நினைப்பதும் குடும்ப வாழ்க்கையின் தேவைகள்.
ஒரு குழந்தை சமூகத்தில் சரியான இடத்தை அடைய ஒரு தந்தையின் அருகாமையும் வழிகாட்டுதலும் மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள். தாயின் அன்பை விட தந்தையின் அன்பு இதில் அதிக முக்கியம் என்கின்றன சில ஆய்வுகள். கணவன் மனைவி உறவு இறுக்கமாய் இருந்தால் தான், தாய் தந்தை பொறுப்புகளும் செவ்வனே நடக்கும்.
ஆண்கள் மரியாதையை எதிர்பார்க்கிறார்கள், பெண்கள் அன்பை எதிர்பார்க்கிறார்கள் என்று உளவியல் சொல்வதுண்டு. உண்மையில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் எதிர்பார்ப்பதும் அன்பு மட்டுமே. அன்பு அடுத்தவரை மரியாதை குறைவாய் நடத்தாது என்பது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் அன்பும் பகிர்தலும் தொடர்ந்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கே ஏதேனும் இடைவெளி விழும்போது தான் வேறு ஏதேனும் ஒரு உறவு வந்து நுழைந்து விடுகிறது. அது குடும்ப வாழ்க்கைக்கு கண்ணிவெடியாய் மாறிவிடுகிறது.
பெண்பாவம் பொல்லாததாய் இருக்கலாம், ஆண்பாவம் சொல்லாததாய் இருக்கலாம்... ஆனால் இதயத்தில் அன்பு இல்லாததாய் மட்டும் இருக்க வேண்டாம்.