லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.
இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல; இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. ‘ஒளி மாசு’ என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
“நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.
அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.
அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.
இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.
செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.