யாழில் காதலனுடன் இருந்த யுவதியை வல்லுறவுக்குட்படுத்திய காவாலிகளுக்கு 10 வருட சிறை!!

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில்
 இரண்டு எதிரிகளுக்கு தலா பத்து ஆண்டுகள் கடூழியச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் மூன்றாம் எதிரியான நபர் ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த சம்பவம் 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று 18 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் ஒதுக்குப் புறமாக இருந்த வேளையில் அங்கு வந்த மூன்று பேர் காதலனைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த 3 இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஒன்றின் உதவியுடன் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு இரண்டு பேரை கைது செய்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாலேந்திரன் பிரபாகரன், சண்முகதாஸ் ரஜிதன், சிறிகணேஸ் சுதாகரன் என்ற மூவருக்கும் எதிரா இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் மூன்றாம் எதிரி கைதாகாமல் தலைமறைவாகி இருந்ததனால், அவர் இல்லாமல் ஏனைய இரண்டு எதிரிகளுக்கு எதிராக விசாரணைகள் நடைபெற்றன.

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய தாய் தந்தையரும் மற்றும் காதலன் என கூறப்பட்டவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு எதிரிகளும் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, இரண்டு எதிரிகளையும் கூட்டுப் பாலியல் குற்றம் புரிந்தமைக்கான குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளுக்கும் தலா பத்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.

மேலும், எதிரிகள் இருவரும் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன் நீதிமன்றுக்கு தலா பத்தாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறினால், 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பின்போது குற்றவாளிகளாக காணப்பட்ட இரண்டு எதிரிகளையும் நோக்கி,

யாழ்ப்பாண கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடத்தப்பட்ட குழு பாலியல் வல்லுறவு குற்றமானது, மிகப் பாரதூரமான குற்றச்சாட்டாகும்.

எதிர்வரும் காலங்களில் எவரும் இத்தகைய குற்றச் செயல்களைச் செய்வதற்குக் கூட எத்தனிக்கக் கூடாது என்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்படுகின்றது.

தன்னுடைய காதலனுடன் ஒதுக்குப்புறமாக நின்ற பொழுது காதலனைத் தாக்கிய 3 எதிரிகளும் 18 வயது நிரம்பிய பெண்ணை குழு பாலியல் வல்லுறவு செய்துள்ளமை மிகமோசமான குற்றச் செயலாகும்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் காதலனும் அந்தப்பெண்ணைக் கைவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளமையும் அந்தப் பெண்ணைப் பாதித்துள்ளது.

ஆகவே பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் எதிர்காலத்தை இந்த நீதிமன்றம் கவனத்திற் கொண்டு, அவருக்கு இழைக்கப்பட்ட குற்றச் செயலுக்கு குற்றவாளிகள் இருவரும் நட்டஈடாக தலா பத்து இலட்சம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது.

நட்டஈடாகிய பத்து இலட்சம் ரூபாவைச் செலுத்தத் தவறினால் மேலும் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இந்த மன்று தீர்ப்பளிக்கின்றது.

அத்துடன் எதிரிகள் இருவரும் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.

இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றதையடுத்து, துரிதமாக செயற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த 3 இராணுவ உத்தியோகத்தர்களான ரத்நாயக்க, அஜித் சாகர, திலிப் குமார ஆகிய மூவரையும் அவர்களுடைய துரிதமான செயற்பாட்டுக்காக நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையின் துணையுடன் 24 மணித்தியாலம், 48 மணித்தியாலத்துக்குள் இரண்டு எதிரிகளையும் கைது செய்திருந்த பொலிஸாரையும் பாராட்டியதுடன், இந்த வழக்கை துரிதமாக விசாரணை செய்த மாவட்ட நீதவானுக்கும் நீதிபதி இளஞ்செழியன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரிக்கான விசாரணையை நீதிபதி எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Tags
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.